பல்வகை ஒலிகள் 1552. | தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன; தார் ஒலித்தன; பேரி ஆம் முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன; முத்து ஒலித்து எழும் அல்குலார் இழை ஒலித்தன; புள் ஒலித்தன; யாழ் ஒலித்தன; - எங்கணும் - மழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. |
எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்; தழை ஒலித்தன - பீலிக்குஞ்சங்கள்விளங்கின; வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம் செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு ஒலித்தன - மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின - பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன; தேர் ஒலித்தன -தேர்கள் தெருவில் ஓடும்போது ஒலி எழுப்பின; முத்து ஒலித்து எழும் அல்குலார் - முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய பெண்களுடைய; இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள் ஒலித்தன - பறவைகள் கூவின; யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன; மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல; கலித்தன - ஒலித்தன. ஒலித்தன என்னும் சொல் பல்வேறு பொருள்களில் அடுத்தடுத்து வந்தமையால் சொற்பின்வருநிலை அணி. 62 |