முடிசூட்டு விழாவுக்கு வருகை தாராதவர்  

1565.நலம் கிளர் பூமி என்னும்
     நங்கையை நறுந் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம்
     காண வந்து அடைந்திலாதார் -
இலங்கையின் நிருதரே; இவ்
     ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற
     விடா மத விலங்கலேயால்.

     நறுந் துழாய் அலங்கலான் - மணம் பொருந்திய துளசி மாலையைச்
சூடும் திருமாலானஇராமபிரான்; நலம் கிளர் பூமி என்னும் நங்கையை -
சிறப்பு மிக்க மண்மகள் என்னும்பிராட்டியை; புணரும்  செல்வம் காண -
சேருகின்ற பேற்றினைக் காண்பதற்கு;  வந்து அடைந்திலாதார் - வந்து
சேராதவர்;  இலங்கையின் நிருதரே - இலங்கையில் உள்ளஅரக்கர்
மட்டுமே ஆவர்;  இவ் ஏர் உலகத்து வாழும் விலங்கலும் - அவரே
யன்றி,  இந்தஏழு உலகங்களிலும் உள்ள மலைகளும்; ஆசை நின்ற விடா
மதம் விலங்கள் -
எட்டுத்திக்குகளிலும் நீங்காமல் நின்ற மதம் பொழியும்
யானைகளுமே ஆகும்.

     அரக்கர்களும், அஃறிணைப் பொருள்களான மலைகளும்,
திசையானைகளும் மட்டுமே வரவில்லைஎன்பதால் பிறர் எல்லாரும் வந்தனர்
என்பதாம். அரக்கர் பகையானும், மலைகள்,அசைதலின்மையானும்,
திசையானைகள் திசைகளைச் சுமத்தலைவிட்டு  வரக்கூடாமையானும்
வரவில்லை. நங்கை - குணங்களால் நிறைந்தவள். ஆல் - அசை.      75