மகளிர் செயல்கள்  

1577.திரு மணி மகுடம் சூடச் சேவகன்
     செல்கின்றான் என்று,
ஒருவரின் ஒருவர் முந்த,
     காதலோடு உவகை உந்த,
இரு கையும் இரைத்து மொய்த்தார்;
     இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்
பொரு அரு தேரில் செல்ல,
     புறத்திடைக் கண்டார் போல்வார்.

     சேவகன்திரு மணி மகுடம் சூட -(அப்பெண்கள்) வீரனாகிய
இராமன் அழகிய இரத்தினம் பதிக்கப்பெற்ற கிரீடம் சூட்டிக்கொள்வதற்கு;
செல்கின்றான் என்று - (தேரில்) போகின்றான்என்று அறிந்து; காதலோடு
உவகை முந்த -
அன்பும் மகிழ்ச்சியும் தூண்டுதலால்; ஒருவரின்ஒருவர்
முந்த - 
ஒருவருக்கொருவர் முற்பட்டு;  இருகையும்இரைத்து
மொய்த்தார்
- இரு பக்கங்களிலும் ஆரவாரித்துக்கொண்டு நெருங்கினார்கள்;
இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் - (அவர்கள்)இனிய உயிர் எல்லார்க்கும்
ஒன்றாகி;  புறத்திடை பொரு அருதேரில் செல்ல -
வெளியில் ஒப்பற்ற
தேரில் போக;  கண்டார் போல்வார் -
அதனைப் பார்த்தவரைப்
போல்பவரானார்.

     மகளிர் தம் உயிரெல்லாம் திரண்டு இராமன் என்னும் ஒருவடிவம்
கொண்டு புறத்தே போவதைக்கண்டவர் போன்றவர் ஆயினர்  என்பது
கருத்து.  இரு கை - தெருவின் இருபக்கங்கள்.                     87