1589. | ‘சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா அத்திரம் நிழற்ற, அருளொடு அவனி ஆள்வார், புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது’ என, நல்லோர். சித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். |
நல்லோர் - நற்பண்புடையவர்; சத்திரம் நிழற்ற - வெண்கொற்றக்குடைநிழலைச் செய்யவும்; நிமிர் தானையொடு - பெருகிய சேனையுடன்; நானா அத்திரம்நிழற்ற - பல்வகைப் படைகளும் ஒளிவீசவும்; அருளோடு அவனி ஆள்வார் - அருளுடன்பூமியை ஆளும் அரசர்கள்; இனி - இராமபிரான் பிறந்த பின்பு; புத்திரர் பெறுதல் புல்லிது - மைந்தர்களைப் பெறுவது சிறுமையுடையது; என - என்று சொல்லி; திகைத்து - திகைத்தும்; உருகி - மனம் உருகியும்; சித்திரம் என நிற்பார் -ஓவியம்போல் அசைவற்று நிற்பர், இராமனைப் போன்ற பிள்ளையை இனி எவரும் பெறல் அரிது என்பது கருத்து. அத்திரங்கள்எய்வன, எறிவன, குத்துவன, வெட்டுவன எனப் பல வகைப்படுதலால் ‘நானா அத்திரம்’ என்றார்.நிழல் - சாயை, ஒளி என்னும் இருபொருள் தருவது. 99 |