1593.ஆண்டு, இனையராய் இனைய கூற, அடல் வீரன்,
தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர்,
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்,
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் -

     ஆண்டு - (நகரமக்கள் வீதியாகிய) அவ்விடத்து;  இனையராய் -
இத்தன்மையராகி; இனைய கூற - இத்தன்மையனவற்றைச்
சொல்லிக்கொண்டிருக்க;  அடல்வீரன் - வெற்றி வீரனாகிய இராமபிரான்;
தூண்டு புரவி - (சுமந்திரனால்)செலுத்தப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட;
பொரு இல் சுந்தர மணித் தேர் - ஒப்பற்றஅழகிய மணிகள் கட்டிய
தேரில்;  நீண்ட கொடி மாட நிரை வீதி - உயர்ந்தகொடிகளையுடைய
மாளிகை வரிசையினையுடைய தெரு;  நிறையப் போய் - நிறைவாக
விளங்கும்படிசென்று;  புகழ்பூண்ட மன்னன் உறை கோயில் - புகழை
ஆபரணமாக அணிந்துள்ள தயரதன்தங்குகின்ற அரண்மனையை; 
புகலோடும் - அடைந்த அளவில்.

     இனையர், இனைய - குறிப்பு வினையாலனையும் பெயர். புகலோடும்
-
உம்மீற்று வினையெச்சம்.                                     103