1595.வேத்தவை, முனிவரோடு,
     விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்து அவை இசைக்கும், செம் பொன்
     மண்டபம் இனிதின் எய்தான்,
ஒத்து அவை, உலகத்து எங்கும்
     உள்ளவை, உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை, வடிவை ஒப்பான், -
     சிற்றவை கோயில் புக்கான்.

     ஒத்து அவை - மறைகளையும்;  உலகத்து எங்கும் உள்ளவை -
உலகு எங்கும்இருக்கும் அறிவு நூல்களையும்;  உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை -
நன்கு உணர்ந்தஞானிகளின் நெஞ்சத்தில் தோன்றுவனவாகிய;
இராமபிரான்; வேத்தவை - அரசர் கூட்டம்;முனிவரோடு -
முனிவர்களுடனே கூடி;  விருப்பொடு களிக்கும் - அன்புடன்மகிழ்கின்ற;
மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும் - உண்மையான கீர்த்திகளைப்
பாடுகின்ற;  செம் பொன் மண்டபம் - சிறந்த பொன்னால் ஆகிய
மண்டபத்தினுள்ளே;  இனிதின் எய்தான் - இனிமையாகப் புகாதவனாகி;
சிற்றவை கோயில் புக்கான் -சிறிய தாயாகிய கைகேயியினுடைய
மாளிகையில் புகுந்தான்.

     அரசரும் முனிவரும்தன் கீர்த்தியைப் பாடிக்கொண்டிருக்கும்
விழாமண்டபத்தில் நுழையாமல்இராமன் கைகேயியின் மாளிகையில்
புகுந்தான். உலகத்து
எங்கும்உள்ளவை - ஆறு அங்கங்கள், மீமாம்சை,
புராணங்கள், தரும சாத்திரங்கள்முதலியன.                       105