கைகேயியினிடம் இராமன் விடை கொள்ளுதல் 1604. | ‘மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ? என் இனி உறுதி அப்பால்? இப் பணி தலைமேல் கொண்டேன்; மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’ |
‘மன்னவன் பணி அன்று ஆகின் - அரசன் கட்டளை அன்று என்றாலும்; நும் பணிமறுப்பெனோ - நமது கட்டளையை யான் செய்யமாட்டேன் என்பேனோ?; என் பின்னவன்பெற்ற செல்வம் - என் தம்பி பரதன் அடைந்த பேறு; அடியனேன் பெற்றது அன்றோ -நான் அடைந்தது அன்றோ?; அப்பால் என் இனி உறுதி - இதற்குப் புறம்பான நன்மை வேறுயாது?; இப் பணி தலைமேல் கொண்டேன் - இக்கட்டளையைத் தலையின்மேல்ஏற்றுக்கொண்டேன்; மின் ஒளிர் கானம் - மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு; இன்றே போகின்றேன் - இப்பொழுதே போகின்றேன்; விடையும்கொண்டேன் - நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன். அரசன் கட்டளையிடவேண்டும் என்பதில்லை; நமது கட்டளையே போதும். கானகம் செல்வேன்என்றான் இராமன். ‘மன்னவன் பணி அன்று ஆகின்’ என்பதில்உம்மை தொக்கது. விடையும் கொண்டேன் - விரைவு பற்றி இறந்த காலத்தால்கூறப்பட்டது; கால வழுவமைதி. 114 |