1610. | என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்; நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து, ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள். |
என்று - என்று கூறி; பின்னரும் - பிறகும்; ‘ மகனே! - இராமகனே; மன்னவன் ஏவியது - சக்கரவர்த்தி ஆணையிட்டது எதுவாயினும்; அன்றுஎனாமை - நீதியன்று என்று மறுக்காமல் அப்படியே ஏற்றுச் செய்வது; உனக்கு அறன் -உனக்குரிய தருமம் ஆகும்; நன்று - நல்லது; நீ - ; நும்பிக்கு - உன்தம்பியாகிய பரதனுக்கு; நானிலம் கொடுத்து - இவ்வுலகை ஆளும் உரிமையைத் தந்து; (அவனுடன்) ஊழி பல - பல நெடுங்காலங்கள்; ஒன்றி வாழுதி - ஒன்றுபட்டுவாழ்வாயாக;’ என்றாள்-. தந்தை சொல்லைமகன் மறுக்கவும் கூடுதல் உலகியல், ஆயினும் அரசன் ஆணை மீறமுடியாதது.ஆகையால் அதுபற்றித் ‘தந்தை ஏவியது’ என்று கூறாமல், ‘மன்னவன்ஏவியது’ என்று கோசலை கூறினாள் என்க. ‘ஏவினன் அரசன்’ (1601) என முன்னும்வந்தது. ‘மூத்தவனுக்கு அரசு உரியது’ என்ற கருத்தில் உள்ளவள் கோசலை ஆதலின், ‘நும்பிக்குநானிலம் நீ கொடுத்து’ என்று கூறினாள். ‘ஆல்’ உரையசை. 5 |