1614. | ‘வஞ்சமோ, மகனே! உனை, “மா நிலம் தஞ்சம் ஆக நீ தாங்கு” என்ற வாசம்? நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ? அஞ்சம்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால்!’ |
‘மகனே! - ; உனை ‘மாநிலம் தஞ்சம் ஆக நீ தாங்கு’ என்ற வாசகம் - உன்னைநோக்கி (தசரத சக்கரவர்த்தி) நீ இந்தப் பூமியைப் பற்றுக்கோடாக இருந்து காப்பாற்றுவாயாக என்று சொல்லிய வார்த்தை; வஞ்சமோ? - வஞ்சனையோ?; நஞ்சமோ? - விடம் போலக் கொடியதோ?; நான் இனி உயிர் வாழ்வெனோ? - நான்இனிமேல் உயிர்வாழ மாட்டுவேனோ?; என் ஆர் உயிர் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் - என் அரிய உயிர் மிகவும் பயப்படும்.’ அரசாளச் சொல்லியிராவிட்டால் காடு போகவும் நேர்ந்திராது என்ற கணிப்பால் கோசலை‘வாசகம் வஞ்சமோ’ என்றாள். ‘தஞ்சம் இவ் உலகம் நீ தாங்குவாய் என’ இத்தொடர் பரதனைநோக்கி வசிட்டன் கூறியதாகப் பின்னரும் வருதல் (2255.) அறிக. முன் இனிதாகிடும்நஞ்சுகூடப் பின் கொல்லும், அதுபோல், ‘அரசாள்க’ என்றது இனிதாகிப் பின்னர்க் ‘காடு ஏகு’என முடிதலின் ‘நஞ்சமோ’ எனக் கூறினாள் - ‘ஆல்’ ஈற்றசை. ‘அஞ்சும்’ என்பதுஅடுக்கு. 9 |