இராமன் கோசலைக்கு ஆறுதல் கூறுதல் 1619. | இத் திறத்தின் இடர் உறுவாள்தனைக் கைத்தலத்தின் எடுத்து, ‘அருங் கற்பினோய் பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? - புகல் - மெய்த் திறத்து நம் வேந்தனை, நீ?’ என்றான். |
(இராமன்) இத்திறத்தின் இடர் உறுவாள்தனை - இவ்வாறு சொல்லிப் புலம்பித்துன்பம் அடைகின்றவளாகிய கோசலைத் தாயை; கைத்தலத்தின் - கைகளால் தூக்கி; ‘அருங்கற்பினோய்! - பெண் டிர்க்கு அரியகற்பினை உடையவளே; மெய்த்திறத்துத நம் வேந்தனை- உண்மைக் கூற்றில்ஒரு சிறிதும் பிறழாத நம் சக்கரவர்த்தியை; நீபொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல்’ - சொன்ன சொல்லை மாற்றிக் கொள்ளும் பொய்த்தன்மை உடையவனாக நீசெய்துவிடுவாயோ, சொல்வாயாக; என்றான் -. சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றல் சத்தியமாம். ‘வனம்போகு’ என்ற பின்னர் வனம்போகாமல் இருந்தால் அரசன் சத்தியம் பாழாகும் என்பதைத் தாய்க்கு நினைவுறுத்தி, நாயகனைச்சத்தியத்தில் காப்பது நாயகியின் கற்புநலம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி‘அருங்கற்பினோய்’ என்று தாயை விளித்தானாம். 14 |