1620. | பொற்புறுத்தன, மெய்ம்மை பொதிந்தன, சொற்புறுத்தற்கு உரியன, சொல்லினான் - கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை வற்புறுத்தி, மனம் கொளத் தேற்றுவான். |
கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை - கற்பு என்பது இப்படிப் பட்டது என்பதைஉலகிற்கு உணர்த்தி நிறுத்திய பெருங் கற்பினை உடைய கோசலையை; வற்புறுத்தி - மனஉறுதிப்படுத்தி; மனம் கொள - மனத்தில் படும்படி; தேற்றுவான் - தெளியப்பண்ண வேண்டி; பொற்ப உறுத்தன -அழகு பொருந்தியனவும்; மெய்ம்மை பொதிந்தன -உண்மை நிரம்பியனவும்; சொற்புறுத்தற்கு உரியன - தாய்க்கு மகன் சொல்லுதற்குத் தகுந்தனவுமாகிய சொற்களைச்; சொல்லினான் - சொன்னான். கல்லின் தன்மை போல உறுதிப்பாடுடைய கற்பு என உரைப்பினும் அமையும். கற்பின் தன்மை உலகம் அறிய உணர்த்திய கற்பு என்பதைச் ‘சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவேஎன்று (2061.) இராமன் சீதையை அழைப்பது கொண்டும் அறிக. 15 |