1628. | ‘மா தவர்க்கு வழிபாடு இழைத்து, அரும் போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள் ஏதம் அற்றன தாங்கி, இமையவர் காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால், |
‘மாதவர்க்கு வழிபாடு இயற்றி - சிறந்த முனிவர்களுக்குப் பணி விடைகளைச் செய்து;அரும் போதம் முற்றி - (அவரால்) பெறுதற்கு அரிய ஞானம் நிரம்பப் பெற்று; பொருஅரு விஞ்சைகள் - ஒப்பற்ற வித்தைகள்; ஏதம் அற்றன - குற்றம் இல்லாதனவற்றை; தாங்கி - பெற்று; இமையவர் காதல் பெற்று - தேவர்களின் அன்பை அடைந்து; இந்நகர் வரக் காண்டி- (யான்) இந்நகரத்துக்குத் திரும்பி வருதலைப் பார்ப்பாயாக.’ போதம் என்பது வீடுபேற்றிற்குரியதாகிய பரமஞானம். பின்னர் அகத்தியர் முதலியமுனிவர்களால் இவ் அரும் போதம் இராமனுக்குக் கிடைக்கிறது. இராமவணாதி வதத்தால்தேவர்களின் அன்பையும் இராமன் பெறுகிறான் என்பது இங்கே குறிப்பிற் புலப்படும். ‘ஆல்’ஈற்றசை. தேற்றம் என்பதும் பொருந்தும். 23 |