1638. | ‘மின் நின்றனைய மேனி, வெளிதாய்விட நின்றதுபோல் உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்; என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று அறியேன்; மன்னன் தகைமை காண வாராய்; மகனே!’ என்னும். |
‘மகனே! - இராமனே; மின் நின்றனைய மேனி - மின்னல் மறையாது ஒருபடித்தாக நின்றால் ஒத்த ஒளிவீசும் உடம்பு; வெறிதாய் விட நின்றது போல் - உள்ளே உயிரற்றுக் கிடப்பது போல; உன்னும் தகைமைக்கு அடையா உறுநோய் - நினைக்கும்தன்மைக்கும் வாராத பெரும் பிணியை; உறுகின்ற உணரான் - அடைகின்றதையும் உணர முடியாதவனாய்; என்என்று உரையான் - அழுகின்ற என்னைப் பார்த்து ஏன் புலம்புகிறாய் என்றும் சொல்லாதவனாய்உள்ளான் உன் தந்தை; என்னே! - என்ன காரணமோ; இதுதான் யாது என்று அறியேன் -இது எதனால் ஆகியது என்று அறியாதவளாக இருக்கின்றேன்; மன்னன் தகைமை காண -அரசனாய் தயரதனது நிலைமையைப் பார்க்க; வாராய்’ - வருவாயாக; என்னும் - உணர்வு இழந்து மூர்ச்சித்துக் கிடக்கிற மன்னனைப் பார்த்து அவன் நிலை காண வரும்படிமகனை அழைத்துப் புலம்பகிகிறாள் கோசலை. 33 |