வசிட்டன் வருதல் 1639. | இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம், ‘ஒவ்வாது,ஒவ்வாது’ என்னா, ஒளிவாள் நிருபர், முனிவர், ‘அவ் ஆறு அறிவாய்’ என்ன, வந்தான் முனிவன்; அவனும், வெவ் வாள் அரசன் நிலை கண்டு, ‘என் ஆம் விளைவு?’ என்று உன்னா. |
இவ்வாறு அழுவாள் இரியல் குரல்சென்று இசையாமுன்னம் - இப்படிச் சொல்லிப்புலம்புகிற கோசலையின் கூக்குரல் போய் மன்னர்கள் கூடியிருக்கும் அவையை அடைந்த அளவில்; ஒளிவாள் நிருபர், முனிவர்- ஒளி பொருந்திய வாள் உடைய அரசர்களும் முனிவர்களும்; ‘ஒவ்வாது ஒவ்வாது’ என்னா - இது இக்கால இயல்புக்குப் பொருந்தாது என்று தம்முள் கூறி;(வசிட்டனை நோக்கி); அவ் ஆறு அறிவாய் என்ன - இந்த அழுகையின் காரணத்தை உடனேசென்று அறிக என்று சொல்ல; முனிவன் வந்தான் - வசிட்ட முனிவன் அங்கு வந்து சேர்ந்தான்; அவனும் - வசிட்டனும்; வெவ்வாள் அரசன் நிலை கண்டு- கொடியவாளை உடைய தசரதன் நிலைமையைப் பார்த்து; விளைவு என்னாம்’ என்று உன்னா - நடந்ததுஎன்னவோ என்று கருதி. கைகேயி வரம் பெற்றது முதலிய நிகழ்வுகை அறியாதவன் வசிட்டன் ஆதலின், ‘என்னாம்விளைவு’ என்று கருதினான். இதன் முடிவு என்னாகுமோ? என்ற அஞ்சியதாகவும் கூறலாம். முடிசூட்டுவிழாவுக்குக் கூடிய மன்னர் முனிவர் காதில் அழுகைக்குரல் விழுந்தபடியால் அவர்கள் பதற்றம் அடைந்து ‘ஒவ்வாது ஒவ்வாது’ என்றனர். இது விரைசொல் அடுக்கு. 34 |