1643.சீதப் பனி நீர் அளவி,
     திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து,
     இன்சொல் புகலாநின்றான்;
ஓதக் கடல் நஞ்சு அனையாள்
     உரை நஞ்சு ஒருவாறு அவிய,
காதல் புதல்வன் வெயரே
     புகல்வான் உயிரும் கண்டான்

     (இவ்வாறு வேண்டி மேலும்) சீதப் பனிநீர் அளவி - குளிர்ச்சியை
உடைய பனிநீரைக்கலந்து; திண்கால் உக்கம் - வலிய கைப்பிடி உடைய
விசிறியினது;  மென்கால் -மெல்லிய காற்றை;  போதத்து அளவே
தவழ்வித்து -
மூர்ச்சை தெளிந்து அறிவுண்டாகும்அளவில் நிகழச் செய்து;
இன்சொல் புகலாநின்றான் - இனிய சொற்களைச்சொல்லுகின்றவன்;
ஒதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒரு வாறு அவிய -
கடலின்கண்எழுந்த விடம் போன்ற கைகேயியின் வரம் என்னும்
வார்த்தையாகிய விடம் ஓரளவுக்கு நீங்க;  காதற் புதல்வன் - அன்பு
மகனாகிய இராமனது;  பெயரே புகல்வான் - பெயரையேசொல்லிக்
கொண்டிருக்கும் தயரதனது; உயிரும் கண்டான் - உயிரையும் பார்த்தான்.

     முனிவன் மென்காற்று வீசி, இன்சொல், கூறி, சோகம், தணிவிக்க,
சற்றே மூர்ச்சைதெளிந்து ‘இராமா, இராமா’ என்று பிதற்றுகின்ற தயரதனுக்கு
உயிர்ப்பு நிலை வந்தது; அதுகண்டான் என்பதாம்.                  38