1649. | ‘கண்னோடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணேதே, “புண்ணூடு ஓடும் கனலோ? விடமோ?” என்னப் புகல்வாய்; பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம் மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே!’ என்றான். |
‘கண்ணோடாதே - இரக்கம் இல்லாமல் கணவன் - தயரதனது; உயிர் ஓடு இடர்காணாதே - உயிர் உடலைவிட்டுச் செல்லும் துன்பத்தையும் அறியாமல்; ‘புண்ணூடு ஓடும்கனலோ; விடமோ’ என்னப் புகல்வாய்- புண்ணிற் புகும் நெருப்போ, விடமோ என்று கருதும்படி பேசுகிறாய்; பெண்ணோ? - அல்லது என்றும் அழியாத பேயோ; நீகொடியாய்! - நீ கொடியவள்; இம்மண்ணோடு உன்னோடு என்னாம் - இந்த மண்ணோடு உனக்கு என்ன உறவு இருக்கிறது; வசையோ வலிது- உனக்கு வர இருக்கும் பழியோமிகவலிது; என்றாள்-. உலகோர் கருத்தும், ஆன்றோர் கருத்தும், கணவன் உயிரும் கருதாமல் செயலிழைக்கும் உனக்குஇந்த உலகத்தோடு என்ன உறவு இருக்கிறது என்றான் வசிட்டன். ‘வெந்த புண்ணில் வேல் செருகியது போல' என்னும் பழமொழியை ஒருபுடை கருதி, ‘புண்ணூடு ஓடும் கனலோ விடமோ' என்பது வந்தது. ‘வலிதே' ‘ஏ' காரம் தேற்றம். 44 |