1652.‘கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க்
     கனி வாய் விடம் நான் நெடு நாள்
உண்டேன்; அதனால், நீ என்
     உயிரை முதலோடு உண்டாய்;
பண்டே, எரிமுன், உன்னை,
     பாவி! தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன்; வேறு ஓர்
     கூற்றம் தேடிக் கொண்டேன்.

     ‘பாவி! - பாவியே;  நெஞ்சம் கண்டேன் - உன் மனக்கருத்தை
இப்போது அறிந்தேன்;  நான் கனிவாய்க் கனி வாய் விடம் நெடுநாள்
உண்டேன் -
நான் அன்போடு பழம்போன்ற உன்னுடைய  வாயிலிருந்த
விடத்தை நீண்ட நாள் சாப்பிட்டுவிட்டேன்; அதனால்-; நீ என் உயிரை
முதலோடு உண்டாய் -
நீ என்னுடைய உயிரை அடியோடு
சாப்பிட்டுவிட்டாய்;  உன்னைப் பண்டே எரிமுன் தேவியாகக்
கொண்டேன் அல்லேன் -
உன்னை முன்பு வேள்வித் தீயின்முன்
மனைவியாக (நான்) கொள்ளவில்லை;  வேறு ஓர் கூற்றம்தேடிக்கொண்டேன்'- (எனக்கு) வேறு ஒரு தனியான யமனைத் தேடித் திருமணம்
என்ற பெயரில் செய்து  கொண்டேன்.'

     ‘நாவில் நஞ்சம்' என்றது  போலக் ‘கனிவாய் விடம்' என்றது காண்க.
‘நீமனைவியல்லள், என் உயிரைக் கொல்ல வந்த யமன்' என்றாள் தசரதன்.
"எரி என்றுஎதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை, அட்டில் புகாதாள் அரும்பிணி
அட்டதனை, உண்டி உவவாதாள்இல்வாழ் பேய் இம்மூவர், கொண்டானைக்
கொல்லும் படை"  என்பது  (நாலடி. 363.) நினைத்தற்குரியது.         47