1660.‘கண்ணும் நீராய், உயிரும்
     ஒழுக, கழியாநின்றேன்;
எண்ணும் நீர் நான்மறையோர்,
     எரிமுன் நின்மேல் சொரிய,
மண்ணும் நீராய் வந்த
     புனலை, மகனே! வினையேற்கு
உண்ணும் நீராய் உதவி,
     உயர் கான் அடைவாய்!' என்றான்.

     ‘மகனே! - இராமனே;  கண்ணும்  நீராய் - கண்கள் இரண்டும்
நீராகி; உயிரும் ஒழுக - உயிரும் உடலை விட்டு வெளியில் செல்ல;
கழியாநின்றேன் -இறந்துகொண்டுள்ளேன்; வினையேற்கு - இப்படித்
தீவினையுடைய எனக்கு; எண்ணும் நீர்நான் மறையோர் - மதிக்கப்படும்
தன்மையுடைய வேதம் வல்ல அந்தணர்; எரி முன்நின்மேல் சொரிய -
மூடிசூட்டு விழாவிற்கு முன்னர் உண்டாக்கப்பட்ட வேள்வித்தீயின் முன்னால்
உன்மேல் அபிடேகம் செய்யவேண்டி;  மண்ணும் நீராய் வந்த புனலை -
அபிடேகசுத்த நீராக வந்த தீர்த்த நீரை;  (இனி அதற்குத் தேவை
இன்மையால்) உண்ணும் நீராய்உதவி - நான் இறந்த பிறகு எனக்குச்
செய்யப்பெறும் பிரேத தாகசாந்தி நீராகக் கொடுத்து (பிறகு);  உயர்கான்
அடைவாய்' -
  உயர்ந்த காட்டை  அடைவாயாக;  என்றான்-

     முடிபுனைந்து நீராட்டப் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவருவர். அது
‘மண்ணு மங்கலம்' எனப்படும். அதுவே ‘மண்ணும் நீர்'  எனப்பட்டது.
இறந்த பின் பத்து  நாளும்  வளர்ந்துஎழுகின்ற  பிரேத பூதத்துக்குத்
தாகசாந்தி  செய்ய நித்தியவதி என்னும் பெயரால் நீர்க்கடன்இறுத்தல்
மகனது  கடன்;  ஆதலால் அதனைத் தயரதன் இராமனைச் செய்ய
வேண்டினான்.                                                55