1662."கறுத்தாய் உருவம்; மனமும்
     கண்ணும் கையும் செய்யாய்;
பொறுத்தாய் பொறையே; இறைவன்,
     புரம் மூன்று எரித்த, போர் வில்
இறுத்தாய்; "தமியேன்" என்னாது,
     என்னை இம் மூப்பிடையே
வெறுத்தாய்; இனி, நான் வாழ்நாள்
     வேண்டேன்! வேண்டேன்! என்றான்.

     ‘உருவம் கறுத்தாய்! - திருமேனி கறுத்திருப்பவனே;  மனமும்
கண்ணும் கையும்செய்யாய்! -
உள்ளமும் கண்ணும் கையும் செம்மையாக
இருப்பவனே;  பொறையேபொறுத்தாய்! - பொறுமையையே
தரித்திருப்பவனே;  இறைவன் - சிவபிரான்;  மூன்று புரம் எரித்த
போர்வில் இறுத்தாய்! -
முப்புரங்களை எரித்த காலத்துப் பிடித்த
போர்க்குரிய வில்லை (சீதா கல்யாணத்துக்கு முன்) ஒடித்தவனே; ‘தமியேன்'
என்னாது
-தனித்துத் துணையின்றி உள்ளேன் என்ற கருதாது;  என்னை
இம் மூப்பிடையே வெறுத்தாய் -
என்னை இம்முதுமைக் காலத்தில்
வெறுத்திட்டாய்;  இனி நான் வாழ்நாள் வேண்டேன்வேண்டேன்' -
இனிமேல் நான் வாழும் நாளை விரும்பமாட்டேன்;  என்றான் - .

     இராமன் சிறப்புகளை எல்லாம் நினைந்து நைந்துருகுகிறான் தயரதன்.
‘வேண்டேன், வேண்டேன்'புலம்பலில் வந்த அடுக்கு. உள்ளத்துக்குச்
செம்மை கோட்ட மின்மையாம்.  மற்றவைநிறம்.                    57