1670. | பூண் ஆர் அணியும், முடியும், பொன் ஆசனமும், குடையும், சேண் ஆர் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன், மாணா மர வற்கலையும், மானின் தோலும் அவை நான் காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்?' |
‘பூண் ஆர் அணியும் - அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்; பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்; குடையும் - வெண்கொற்றக் குடையும்; சேண் ஆர்மார்பும் - அகன்று பொருந்திய மார்பும்; திருவும் - அங்கே வீற்றிருக்கும்திருமகளும்; தெரியக் காணக் கடவேன் நான் - விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்; மாணா மர வற்கலையும் - மாட்சிமை இல்லாத மரவுரியும்; மானின் தோலும் - மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்; அவை - ஆகிய அவற்றை; காணாது ஒழிந்தேன் என்றால் - பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன் என்றால்; கருமம் நன்றுஆய்த்து அன்றோ? - என் செயல் நல்லதாக ஆய்விடும் அல்லவா? அரச கோலத்தைக் காணவேண்டிய நான் தவக்கோலம் காண நேர்ந்ததே; இதைக் காணாமல்போய்விட்டால் நல்லதல்லவா என்று புலம்பினான். ‘பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில்சேர் அல்குற், காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகுமாறி, ஏ மருதோள் என் புதல்வன் யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல், தூமறையீர் இது தகவோ, சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே' என்ற குலசேகர ஆழ்வார் பாசுரம் (திவ்ய.735.) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. தவம் செய்வோர் மரவுரி உடுத்து மான் தோல் போர்த்தல் மரபு. 65 |