1673. | ‘மறந்தான் நினைவும் உயிரும், மன்னன்’ என்ன மறுகா, ‘இறந்தான் கொல்லோ அரசன்?’ என்னா, இடர் உற்று அழிவாள், ‘துறந்தான் மகன் முன் எனையும்; துறந்தாய் நீயும்; துணைவா! அறம்தான் இதுவோ? ஐயா! அரசர்க்கு அரசே!’ என்றாள். |
மன்னன்நினைவும் உயிரும் மறந்தான்' என்ன மறுகா - அரசன் ஞாபகமும் உயிரும்மறக்கப்பெற்றான் என்ற கருதி மனம் கலங்கி; ‘அரசன் இறந்தான் கொல்லோ’ என்னா இடர் உற்று அழிவாள் - அரசன் இறந்தான் போலும் என்று துன்பமுற்று வருந்தும் கோசலை;’ மகன் முன்எனையும் துறந்தான்’ -மகனாகிய இராமனும் முன்னால் என்னைக் கைவிட்டான்; ‘நீயும்துறந்தாய்’- கணவனாகிய நீயும் என்னைக் கைவிட்டாய்; துணைவா! -என்துணைவனே!; ஐயா! - ஐயனே!; அரசர்க்கு அரசே! -இராச இராசனே!; அறம்தான் இதுவோ' - அறம் என்பது இதுதானோ; என்றாள்-. தாயை மகன் துறப்பதும், மனைவியைக் கணவன் துறப்பதும்தான் தருமமா? என்று வினாவிப்புலம்பினாள் - ‘கொல’ ஐயம், ‘ஓ’ வினாப் பொருளில் வந்தது. ‘எனையும்’ என்பதிலுள்ள உம்மை‘மகன்’ என்பதனோடு கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது. 68 |