1647. | ‘மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே! உய்யும்வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பில், வையம் முழுதும் துயரால் மறுகும்; முனிவனுடன் நம் ஐயன் வரினும் வருமால்; அயரேல்; அரசே!' என்றாள். |
‘மெய்யின் மெய்யே! - சத்தியத்தின் சத்தியமே; உலகின் வேந்தர்க் கெல்லாம் வேந்தே! - உலகில் உள்ள அரசர்க்கெல்லாம் அரசனே; நின் உயிரை உய்யும் வகை ஓம்பாது - உன்னுடைய உயிரைப் பிழைக்கும் வகையில்பாதுகாக்காமல்; இங்ஙன் தேம்பில் - இவ்வாறு வாடினால்; வையம் முழுதும் துயரால்மறுகும் - இவ்வுலகம் முழுதும் துன்பத்தால் கலங்கிச் சுழலும்; அரசே! - ; நம் ஐயன் -நம் மகன்; முனிவனுடன் வரினும் வரும் - வசிட்டனுடன் (கான் ஏகாது) திரும்பி வந்தாலும் வருவான்; அயரேல் - சோர்வடையாதே;’ என்றாள் - உலகத்துக்காக வாழ்ந்த நீ துன்புற்றால் இப்பொழுது உலகமும் துன்புறும். உனக்காகஇல்லாவிடினும் உலக மக்களுக்காகத் துன்பத்தில் துவளாமல் இருக்க என வேண்டினாள் - ‘வரினும்வரும்’ என்பது ஐயம். வருவது உறுதியில்லை என்பது அவள் அறிந்தபடியைப் புலப்படுத்தி நின்றது. ‘ஆல்' அசை. 69 |