1679.‘ஒரு மா முனிவன் மனையோடு,
     ஒளி ஒன்றிலவாய் நயனம்
திரு மா மகனே துணையாய்,
     தவமே புரி போழ்தினின்வாய்,
அரு மா மகனே, புனல் கொண்டு
     அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும்,
     புவிமீது அலறிப் புரள.

     ‘ஒரு மா முனிவன் - ஒப்பற்ற சிறந்த முனிவன்;  மனையோடு -
தன்மனைவியோடு; நயனம் ஒளி ஒன்றிலவாய் - கண்கள் பார்வை ஒளி
இழந்தனவாகி; திருமா மகனே - அழகிய சிறந்த மகனே; துணையாய் -
தனக்கு உதவியாகக் கொண்டு;  தவமே புரி போழ்தினின்வாய் - தவம்
செய்துகொண்டிருக்கின்ற காலத்தின்கண்; அரு மாமகனே - அரிய சிறந்த
அம்மகனே; புனல் கொண்டு அகல்வான் - நீர் எடுத்துக்கொண்டு
செல்வதற்காக; வருமாறு அறியேன் - வரும் தன்மையை அறியாதவனாய்;
பொரு மா கணை விட்டிடலும் - அழிக்கின்ற சிறந்த அம்பை விட்ட
அளவில்; புவிமீது அலறிப்புரள - (அம்பு பட்டு அம்மகன்) மண்ணின்
மீது  புரண்டு அலற.

     மகன் - புரோசனன், மகனே துணையாய்த் தவம் செய்தனர் என்பதால்
முனிவனும் அவன் மனைவியும் இருவரும் பார்வை இழந்தவர்கள் என்பதாம்.
நீர் முகக்கும்ஓசை கேட்டு ஓசையின்மூலம் அம்பைவிடும்  ‘சப்த வேதி’
என்னும் முறையில்,  யானை நீர்குடிப்பதாகக் கருதி அம்பை எய்தான்
ஆதலின் ‘அறியேன்’ என்றான்.  இருமுதுகுரவர்க்கும் கடமைஆற்றும்
சிறப்பு நோக்கி,  ‘திரு மா’,  ‘அரு மா’  என்று அம்மகனைச் சிறப்பித்தார்.
மகனே‘ஏ’ காரம் பிரிநிலை. வேறு துணையில்லை என்றவாறாம்.