1682.‘ “இரு கண்களும் இன்றிய தாய்
     தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகம் புனல் கொண்டு அகல்வான்
     படர்ந்தேன்; பழுது ஆயினதால்; -
இரு குன்று அனைய புயத்தாய்! -
     இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ;
     ஊழின் செயல் ஈது!’ என்றே.

     ‘இரு குன்று அனைய புயத்தாய்! - இரண்டு  மலைகளைப் போன்ற
தோளை உடையவனே!; ‘ஈங்கு இரு கண்களும் இன்றிய தாய்
தந்தைக்கும் -
  இப்பொழுது இரு கண்களும் இல்லாத தாய்தந்தை
இருவர்க்கும்;  பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் -
உண்ணுகின்றநீரை முகந்து  கொண்டு செல்ல வேண்டி வந்தேன்;  பழுது
ஆயினது -
அச்செயல் பழுது  ஆய்விட்டது;  உணராது - அறியாமல்;
இபம் என்று எய்தாய் - யானை என்று கருதி(என்மீது) அம்பு
தொடுத்தாய்;  ஈது  ஊழின் செயல் - இது  விதியினது  தொழில் (என்று
நினைந்து);  நீ உருகும் துயரம் தவிர்’ - நீ மனம் கரைகின்ற துன்பத்தை
விடு; என்று- எனச் சொல்லி.

     ‘பழுது ஆயினது’ எனக்கு இத்தீமை உண்டாயிற்று எனலும் ஆம்.
தனக்கு உண்டான தீமை கருதாதுபெற்றோர்களுக்கு நிர் கொண்டு போம்
செயல் குன்றி விட்டதே என்பதை நினைத்து  வருந்துவதாகமுனிமகனைக்
கூறல் அவனது  பண்பை மேலும் சிறப்பிப்பது ஆகும். ‘ஆல்’ ழுஏ’
அசைகள்.                                                    77