1686.‘ “வீட்டுண்டு அலறும் குரலால்,
     வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘ நீ யார்?’
     என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய்,
     நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே,
     இறந்து ஏகினன் விண்ணிடையே.

     ‘வீட்டுஉண்டு - அம்பு விடுதலால் அடிபட்டு; அலறும்குரலால் -
கதறுகின்றசப்தத்தால்; வேழக் குரல் அன்று எனவே- யானையின் குரல்
அன்று  என்று கருதி;  ஓட்டந்து - ஓடி;  எதிரா- (உங்கள் மகனைச்)
சந்தித்து;  ‘நீ யார்’ என -நீ யார் என்று(நான் கேட்க குமரன்); உற்ற
எலாம் உரையா -
நடந்தவை அனைத்தையும்சொல்லி;  வாட்டம்தரு
நெஞ்சினனாய் -
வாடிப் போன மனம்  உடையவனாகி;  வணங்கா
நின்றான்
- உங்களிருவருக்கும் வணக்கம் தெரிவித்து, பேச்சு அடங்கினான்;
வானோர் ஈட்டம்  எதிர் வந்திட -
தேவர்கள்கூட்டம் எதிர்வந்து
வரவேற்க; இறந்துவிண்ணிடை - இறந்து மேல்உலகத்தின்கண்; 
ஏகினன் - சென்றான்:

     வாட்டம் தரும் நெஞ்சு - தன்னைப் பிரிந்தமையால் கண் இழந்த
பெற்றோர் முதுமையில்உதவுவாரின்றி வாடுவர் என்பது பற்றிய வாட்டம்
என்க.  இறுதி ‘ஏ’ காரம் ஈற்றசை.                               81