1687.‘ “அறுத்தாய் கணையால் எனவே,
     அடியேன்தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ
     கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத் தான் இல்லான் வனம்
     மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!” என்னா,
     இரு தாள் சென்னி புனைந்தேன்.

     ‘ஐயா! - ஐயனே; கணையால் அறுத்தாய் எனவே - (என் மகனை)
அம்பால்எய்து அழித்தாய் என்று;  அடியேன் தன்னை - அடியேனை;
கறுத்தே அருளாய் -கோபித்து விடாமல் இருப்பாயாக; மறுத்தான்
இல்லான்
- களங்கம் சிறிதும் இல்லாதவனாயநின்மகன்; வனம்
மொண்டிடும்  ஓதையின் -
நீரை முகக்கின்ற  ஓசையினால்;  எய்தது
அலால் -
அம்பு எய்தது அல்லாமல்;  யானோ கண்ணில் கண்டேன்
அல்லேன் -
யான்கண்ணால் பார்த்து  (அம்பு எய்தேன் அல்லேன்);
பொறுத்து அருள்வாய்’ - (இந்த எனதுபிழையைப்) பொறுத்தருள்வாயாக;
என்னா - என்று;  இரு தாள் - (அம்முனிவனது) இரு திருவடிகளையும்;
சென்னி புனைந்தேன் - (விழுந்து வணங்கி) என் தலைமேல்
சூடிக்கொண்டேன்.

     கறுத்தல்- கோபித்தல். “கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள்” (தொல்.
சொல்.372.) என்பது காண்க. அருளுதல் துணைவினை. கறுத்தருளாய் என
ஒன்றாக்குக.  பெரியோர் செயலைச்சொல்லும் இடத்து ‘அருளாய் ’ எனும்
சொல் வரும். அருளாய் என்பதில் ஆகாரம் எதிர்மறை.              82