1689.‘என்று என்று அயரும் தவரை,
     இரு தாள் வணங்கி, “ யானே
இன்று உம் புதல்வன்; இனி, நீர்
     ஏவும் பணி செய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்;
     ஒழிமின் இடர்” என்றிடலும்,
“வண் திண் சிலையாய் கேண்மோ”
     எனவே, ஒரு சொல் வகுத்தான்:

     ‘என்று என்று - இவ்வாறு பலபடியாகப் புலம்பி;  அயரும் -
சோர்வடைகிற; தவரை - முனிவரை; இருதாள் வணங்கி - திருவடிகளில்
வணங்கி;  யானே இன்றுஉம் புதல்வன் - நான் இன்று முதல் உங்கள்
மகன் ஆவேன்;  இனி நீர் ஏவும்பணிசெய்திடுவேன் - இனி மேல்
நீங்கள் இடும் கட்டளையைச் செய்து  முடிப்பேன்;  ஒன்றும்தளர்வுற்று
அயரீர் -
சிறிதும் சோர்வடையாதீர்; இடர் ஒழிமின்’- துன்பம்நீங்குங்கள்;
என்றிடலும் - என்று சொல்லவும்;  ‘வன் திண் சிலையாய்! -வலிய
கட்டமைந்த வில்லை உடையவனே; கேண்மோ’ - கேட்பாயாக; எனவே -
என்று; ஒரு சொல் வகுத்தான் - (அம்முனிவன்) ஒரு வார்த்தை
சொன்னான்.

     ‘யானே’ ‘ஏ’ காரம் தேற்றம். ஒழிமின் - முன்னிலைப் பன்மை
வினைமுற்று. ‘கேண்மோ’ -‘மோ’ முன்னிலை அசைச்சொல். காமம்
செப்பாது  கண்டது  மொழிமோ’  (குறுந்.2) என்புழிப் போல.          84