1690. | ‘ “கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா, உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்? விண்ணின்தலை சேருதும் யாம்; எம்போல், விடலை பிரிய, பண்ணும் பரி மா உடையாய்; அடைவாய், படர் வான்” என்னா. |
‘கண் உள் மணி போல் மகவை இழந்தும் - கண்ணிற்குள்ளே உள்ள கருமணிப் பாவைபோன்ற சிறந்த மகனை இழந்த பிறகும்; உயிர் காதலியா - உயிர்மேல் ஆசை வைத்து; உண்ண எண்ணி இருந்தால் - உண்பதற்கு நினைத்து (உலகில் வாழ்ந்து) இருந்தால்; உலகோர் என் என்று உரையார்? - உலகில் உள்ளவர்கள் (எங்களை) என்னவென்று பழியார்; யாம் விண்ணின்தலை சேருதும் - நாங்களும் (இறந்து) மேல் உலகம் சேர்கிறோம்; பண்ணும் பரிமா உடையாய் - அலங்கரிக்கப் பெற்ற குதிரையை உடைய மன்னனே; எம்போல் - எங்களைப் போல; விடலை பிரிய - மகன் பிரிந்து செல்ல; படர்வான் அடைவாய்’ - அகன்ற வானுலகை அடைவாயாக; என்னா - என்று சொல்லி. உலகோரது பழிமொழிக்கு அஞ்சி யாங்கள் வானுலகு சேர்வோம் என்று மனைவியையும்,உளப்படுத்தி முனிவன் கூறினான் - ‘கண்ணிற் கருமணி’ என்றான் மகனை; இதுவரை இவர்களுக்குப்பார்வையாக இருந்தவன் ஆதலின். 85 |