1703.ஆவும் அழுத; அதன் கன்று
     அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள்
     அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத;
     கால் வயப் போர்
மாவும் அழுத; - அம்
     மன்னவனை மானவே.

     அம் மன்னவனை மான - (இராமன் பிரிவால் துயர் உறும்)
தசரதனை ஒப்ப;  ஆவும்அழுத - பசுக்கள் அழுதன;  அதன் கன்று
அழுத
- அப் பசுக்களின் கன்றுகள் அழுதன;  அன்று அலர்ந்த பூவும்
அழுத
- அப்போது  மலர்ந்த பூக்களும் அழுதன;  புனல் புள் அழுத-
நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத - தேன்
சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத - யானைகள் அழுதன;
கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல
குதிரைகளும் அழுதன.

     ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால்
அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார்.                      98