1706. | ‘‘மண் செய்த பாவம் உளது’ என்பார்; ‘மா மலர்மேல் பெண் செய்த பாவம் அதனின் பெரிது ’ என்பார்; ‘புண் செய்த நெஞ்சை, விதி’ என்பார்; ‘ பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின் பெரிது ’ என்பார். | (நகரமாந்தர்) ‘மண்செய்தபாவம் உளது’ என்பார் - ‘நிலமகள் செய்த தீவினை மிகுதியாக உள்ளது’ என்பர்; ‘மாமலர் மேல் பெண் செய்த பாவம் அதனின் பெரிது’- சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகள் செய்த தீவினை அதைக்காட்டிலும் மிகுதி; ’என்பார்-; ‘புண் செய்த நெஞ்சை விதி - புண்பட்ட மனத்தைப் பார்த்து இது விதியால் விளைந்தது;’ என்பார்- ; பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின் பெரிது’ - இப்பூமியில் உள்ளவர்களின் கண் செய்த தீவினை கடலைக்காட்டிலும் மிகுதி;’ என்பார்- . இராமனால் ஆளப்பெறாமையால் பூமியும், அனுபவிக்கப் பெறாமையால் செல்வமகளும் பாவம் செய்தவர் ஆயினர். மணி முடி தரித்துச் செல்லும் காட்சியைக் காணவேண்டிய கண்கள் மரவுரி தரித்துக் காடு செல்லும் காட்சியைக் காண நேரிட்டமையின் கண் செய்த பாவம் மிகுதியாம். 101 |