1712. | ‘பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம் முற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி, உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில். புற்று உடைய காடு எல்லாம் நாடாகிப் போம்’ என்பார். |
‘பெற்றுடையமண் அவளுக்கு ஈந்து- (வரத்தால்) பெற்றுத் தனக்குச் சொந்தமாகிக்கொண்ட இராச்சியத்தைக் கைகேயிக்குக் கொடுத்து; பிறந்து- (மூத்தவனாகப்) பிறந்து; உலகம் முற்றுடைய கோவை- உலகம் முழுதும் தனக்கு உரியதாகப்பெற்ற இராமனை; பிரியாது- பிரிந்து நகரத்தில் வாழாது; யாரும் மொய்த்து ஈண்டி உற்றுஉறைதும் - எல்லாரும் நெருங்கிச் சென்று (அவனுடைய) தங்கி வசிப்போம்; உறையவே - (அவ்வாறு நாம் எல்லாம் சென்று தங்கி) வசிக்கவே; புற்றுஉடைய காடு எல்லாம் நாடு ஆகிப்போம்’ - பாம்புப் புற்றுகளை உடைய காடுகள் மக்கள்வசிக்கும் நாடாகிவிடும்;’ என்பார்-. ‘பெற்றுடைய மண்’, ‘பிறந்துடைய மண்’ என்பது அழகிய வாசகம். மக்கள் சென்று உறையக்காடு நாடாகும் என்பதால், இராமனின்றிக் கைகேயி பெற்றுடைய மண்ணை ஆளும் பொழுது மக்கள்இல்லாத நாடு காடாகிவிடும் என்றாராம். இராமன் சென்ற காடும் நாடாம், கைகேயி ஆளும் நாடும் காடாகும் ஆதலின் இராமனுக்குக் கைகேயி அளித்த காட்டை நாம் அவளுக்கு அவள் இருக்கிறநகரத்திலேயே உண்டாக்கிவிடுவோம் என்பதும் நகரமாந்தர் குறிப்பாகக் கொண்டு நயம்காணலாம். 107 |