1715. | உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார், “செந்தாமரைத் தடங் கண் செல்வி அருள் நோக்கம் அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!’ என்பார். |
‘உந்தாது - தூண்டப்படாமல்; நெய்வார்த்து உதவாது - நெய்ஊற்றி உதவிசெய்யாமல்; கால் எறிய - காற்று வீசுதலால்; நந்தா விளக்கின் - (நடுங்குகின்ற) கெடாத விளக்குப் போல; நடுங்குகின்ற நங்கைமார் - துடிக்கின்றமகளிர்; ‘செந்தாமரைத் தடங்கண் - (இராமரை) செந்தாமரை மலர் போன்ற விசாலமானகண்களாற் பெறும்; செல்வி அருள் நோக்கம்- தக்க பருவத்தே விளையும் அருள்பார்வையை; பிரிதுமோ? - பிரியப் போகிறோமோ; அந்தோ! ஆ! விதியே! ஓ!’என்பார் -. நந்தா விளக்காயினும் தூண்டுதல், நெய்வார்த்தல் முதலிய உதவியில்லை மாறாகக் காற்று எறிகிறது; எனவே அணையாமலும் இருக்கிறது, நடுங்கவும் எப்போது அணையுமோ என்பது போல் உள்ளது. மகளிர் உயிர்விடவும் செய்யாது வாழவும் இயலாமல் அவலத்தில் துடிக்கின்றனர் என்பதாம். ‘அந்தோ! ஆ! ஓ’ என்பன இரக்கக் குறிப்புகள். 110 |