1719.சுற்று ஆர்ந்த கச்சில்
     சுரிகை புடை தோன்ற ஆர்த்து,
வில் தாங்கி, வாளிப்
     பெரும் புட்டில் புறத்து வீக்கி,
பற்று ஆர்ந்த செம் பொன்
     கவசம், பனி மேரு ஆங்கு ஓர்
புற்று ஆம் என ஓங்கிய
     தோளொடு, மார்பு போர்க்க.

     சுற்று ஆர்ந்த கச்சில்- இடையைச் சுற்றி அமைந்த இடைக்கச்சிலே;
கரிகை -வாளை; புடை தோன்ற ஆர்த்து - வெளியில் தெரியும்படி
கட்டி; வில் தாங்கி -வில்லைச் சுமந்து; வாளிப் பெரும்புட்டில் புறத்து
வீக்கி -
அம்புகள் அமைந்த பெரியதூணியை முதுகுப்புறத்தில்
கட்டியமைத்து;  பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் - நன்றாகப்பிடிப்புப்
பொருந்திய செம்பொன்னாலாகிய கவசம்; பனிமேரு ஆங்கு ஓர் புற்று
ஆம் என -
குளிர்ந்த மேரு மலை ஒரு புற்று ஆகும் என்று சொல்லும்படி;
ஓங்கிய தோளொடு -உயர்ந்துள்ள தோளோடு; மார்பு போர்க்க -
மார்பையும்  மூடிக்கொள்ள.

     இடுப்பைச் சுற்றியுள்ள கச்சில் வாளைச் செருகுதல் இயல்பு. தோளின்
பெருமை நோக்கமேருமலை ஒரு புற்றுப் போலத் தோன்றும் என்றார்.  114