இலக்குமணன் நாணொலி கேட்டு இராமன் வருதல் 1725. | வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி, தேற்றத் தெளியாது அயர் சிற்றவைபால் இருந்தான், ஆற்றல் துணைத் தம்பிதன் வில் - புயல், அண்ட கோளம் கீற்று ஒத்து உடைய, படும் நாண் உரும் ஏறு கேளா. |
வேற்றுக்கொடியாள் - மனம் வேறுபட்ட கொடியவளான கைகேயி; விளைவித்தவினைக்கு - உண்டாக்கிய துன்பச்செயலுக்கு; விம்மி - கலங்கி; தேற்ற - ஆறுதல் கூறவும்;தெளியாது -மனம் சமாதானம் அடையாமல்; அயர் - சோர்கின்ற; சிற்றவைபால்இருந்தான்- சுமித்திரையாகிய சிற்றன்னையிடத்தே இருந்தவனாகிய இராமன்; ஆற்றல்- வலியிற் சிறந்த; துணைத் தம்பிதன்-தனக்குத் துணையாகிய இலக்குவனது; வில்புயல் - வில் என்கிற மேகத்திருந்து;அண்ட கோளம் - உலக உருண்டை; கீற்று ஒத்து உடைய- கீறுகீறாகப்பிளவுபட்டுத் தரும்படி; படும் - உண்டாகிய; நாண் உரும் ஏற- நாணொலியாகிய இடியேற்றொலியை; கேளா - கேட்டு. இராமன் சுமித்திரை மாளிகை சென்றதை இப்படலத்து இருபத்தெட்டாம் பாடலிற் காண்க.கேளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். அது ‘வந்தான்’ என அடுத்த பாட்டில் முடியும். 120 |