1732.‘நின்கண் பரிவு இல்லவர்
     நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை
     பொறுத்து, உயிர் போற்றுகேனோ -
என் கட்புலமுன் உனக்கு
     ஈந்துவைத்து, “இல்லை” என்ற
வன்கண் புலம் தாங்கிய
     மன்னவன் காண்கொல்?’ என்றான்.

     ‘என் கண்புல முன் உனக்கு  ஈந்து  வைத்து - என் கண் எதிரே
உனக்கு அரசைக்கொடுத்து; ‘இல்லை’ என்ற- பிறகு உனக்கு அரசு இல்லை
என்று சொல்லிய;  வன் கண் புலம்தாங்கிய மன்னவன் காண்கொல்?-
கொடுந் தன்மை உடைய தயரதனோ யானும்;  நின்கண்பரிவு இல்லவர்?-
உன்னிடத்து  அன்பு இல்லாதவர்கள்;  நீள்வனத்து - நீண்டகாட்டில்;
உன்னை நீக்க - உன்னை அனுப்ப (அதன் பிறகும்);  புன்கண் கொறி
யாக்கை பொறுத்து
- பொலிவழிந்த ஐம்பொறிகளை உடைய உடம்பைச்
சுமந்து;  உயிர் போற்றுகேனோ?’ -  உயிரைப் பாதுகாத்து (தயரதன்
போல்) வாழ்வேனா;’  என்றான். -

     இராமனை வனம் அனுப்பித் தயரதன் உயிர் வாழ்வதாக நினைத்தவன்
ஆதலின் நானும்அவ்வாறானவன் அல்லன் என்று  இங்ஙனம் கூறினான்
இலக்குவன்.  வன் - கொடிய,  கண் புலம் -கண்ணாகிய புலம் எனினும்
ஆம்.                                                       127