இராமன் பதில்  

1733.‘ “பின், குற்றம் மன்னும் பயக்கும்
     அரசு” என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி
     கொள்க” எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல்
     மன்னவன் குற்றம் யாதோ? -
மின் குற்று ஒளிரும் வெயில்
     தீக்கொடு அமைந்த வேலோய்!

     மின் குற்றுஒளிரும் வெயில் தீக் கொடு அமைந்த வேலோய்!-
மின்னலைவென்று விளங்குகின்ற வெயிலையும் நெருப்பையும் கொண்டு
செய்யப் பெற்ற வேலை உடைய இலக்குவனே;  கொற்ற மன்னன்-
வெற்றியுடைய தயரதன்;  முன் -;  ‘முடிகொள்க’  என- மகுடத்தைச்
சூடி அரசு ஏற்க எனச் சொல்ல; ‘அரசு பின் மன்னும்குற்றம்பயக்கும்’
என்றல் பேணேன்
- அரசாட்சி பிறகு மிகுதியும் நமக்குக் குற்றங்களை
உண்டாக்கும் என்று கருதாமல்;  கொள்ள மூண்டது- ஏற்றுக்கொள்ள
முயன்றது;  என்குற்றம்  அன்றோ? - (இதில்) பகைவன்மை அழிக்கும்
தயரதனாகிய  மன்னவனது  தவறு யாதுளது.’

     ஆராயாமல் அரசு ஆள ஒப்புக்கொண்டது என் தவறுதானே அன்றி,
அளி்த்தவன்மேல் தவறு  இல்லைஎன்றான் இராமன். அரசு பலர்
ஆசைப்படக் கூடிய ஒன்று.  இதனாற் பின்னர்ப் பல தீமைகள்விளையும்
என்று நான் கருதாமல் ஒப்புக்கொண்டமையால்  என்னைத்தான் தண்டிக்க
வேண்டுமேஅன்றி,  எந்தையைக் குறைகூறல்  சரியன்று  என்று
சமத்காரமாகக் கூறித் தம்பியை அடக்கினான்இராமன் என்க.          128