இலக்குவன் சினம் அடங்கல் 1740. | செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும், ‘தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்; இரு தோள் எனச் சோம்பி ஓங்கும் கல்லும் சுமந்தேன்; கணைப் புட்டிலும், கட்டு அமைந்த வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை?’ என்றான். |
செல்லும் சொல் வல்லான் எதிர் - (குறித்த செயலை) நிறைவேற்ற வல்லசொற்களைக் கூறுதல் வல்ல இராமன் எதிரே; தம்பியும் - இலக்குவனும்; ‘தெவ்வர்சொல்லும் சொல்லும் சுமந்தேன் - உன் பகைவர்களாகிய கைகேயி முதலியவர்கள் சொல்கின்றசொல்லையும் தாங்கினேன்; இரு தோள் எனச் சோம்பி ஏங்கும் கல்லும் சுமத்தேன்- (அப் பகைவர்களை அழிக்க முயலாது) இரண்டு தோள்எனப் பெயர்பெற்று வேலையின்றி ஓய்ந்து கிடக்கும் மலைகளையும் தாங்கியுள்ளேன்; கணைப் புட்டிலும், கட்டு அமைந்த வில்லும் -அம்பு அறாத் தூணியும், நன்கு கட்டிச் செய்யப்பெற்ற வில்லும் ஆகியவற்றையும்; சுமக்கப்பிறந்தேன் - பயனின்றித் தூக்கிக்கொண்டு கிடக்கப் பிறவி எடுத்தேன் (இத்தகைய துர்ப்பாக்கியனாகிய யான்); வெகுண்டு என்னை?’ - கோபிப்பதால் என்ன பயன்;’ என்றான் -. ‘தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்’ என்பதற்கு இதுவரை பகைவர்களால் புகழப்படும் சொல்லைச் சுமந்தனோகிய யான் என்று இலக்குவன் கூறியதாகப்பொருள் கோடலும் உண்டு. ஆயினும், இங்கே இலக்குவன் கூற்றில் வரும் மூன்றும் சினத்தாற்பயனில்லை என்கிற அவலநிலையில் கூறுவதாக ஒரு தொடராகப் பொருள் கோடலே சிறப்பாதல் கூர்ந்து அறிக. ‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும்அரிது’ வெகுண்டு என்னை?’ என்றான். 135 |