இலக்குவன்சீற்றம் தணிதல்  

1742.சீற்றம் துறந்தான்; எதிர்நின்று
     தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான்; மறை நான்கு
     என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின்,
     நம்பி தன் ஆணையாலே,
ஏற்றம் தொடங்காக் கடலின்,
     தணிவு எய்தி நின்றான்.

     (இலக்குவன்) மறை நான்கு என வாங்கள் செல்லா நால்
தெண்திரை  வேலையின் நம்பிதன்ஆணையால்
- வேதங்கள் நான்கு
என்று என்றும்  குறைவுபடாத நான்கு கடல்களை உடைய ஆடவர்
திலகமாகிய இராமனது  கட்டளையால்;  சீற்றம் துறந்தான் - சினத்தைக்
கைவிட்டான்; எதிர் நின்று - (இராமன் ) எதிரில் இருந்து;  தெரிந்து -
ஆராய்ந்து; செப்பும் - கூறுகின்ற; மாற்றம் - (தர்க்கவாத) வார்த்தைகளை;
துறந்தான் - கைவிட்டான்; ஏற்றம் தொடங்காக் கடலின் - கரையைக்
கடவாத கடல் போல; தணிவு எய்தி நின்றான்- (சினம்) அடங்கி நின்றான்.

     ‘என்றும்  வற்றாத நாற்பெருங் கடல் போன்ற நான்கு வேதங்களை
உடைய நம்பி’  எனஇயைக்க,  சீற்றத் தணிவுக்குக் கடல் உவமை. அலை
ஓயாது;  ஆயினும்  கட்டுக்குள் நிற்கும்.இலக்குவன் உணர்ச்சி ஓயாது;
ஆயினும், இராமபிரானின் சொல்லுக்குக்கட்டுப்பட்டான்.            137