1745. | சோர்வாளை, ஓடித் தொழுது ஏந்தினன்; துன்பம் என்னும் ஈர் வாளை வாங்கி, மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்; ‘போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்; கார்வான்நெடுங் கான் இறை கண்டு, இஙன் மீள்வென்’ என்றான். |
சோர்வாளை - தளர்கின்ற சுமித்திரையை; தொழுது - (இராமன்) மத வணங்கி ஓடி ஏந்தினன் - விரைந்து சென்று தாங்கிக்கொண்டான்; துன்பம் என்னும் ஈர்வாளை வாங்கி - (அவளது) துயர் என்கிற மனத்தை அறுக்கும் வாளை வெளியே எடுத்து; மனம்தேறுதற்கு - மனம் தெளிவடைவதற்கு; ஏற்ற செய்வான் - தக்க செயல்களைச்செய்பவனாய்; ‘போர் வாள் அரசர்க்கு இறை - போர் செய்வதில் வல்லவாளை உடையசக்கரவர்த்தியை; பொய்த்தனன் ஆக்ககில்லேன் - சத்தியம் தவறியவனாகச் செய்யமுடியாதவனாய் உள்ளேன்; கார்வான் நெடுங்கானம்- கரிய மேகம் சூழ்ந்த பெரியகாட்டை; இறைகண்டு - சிறிது பார்த்துவிட்டு; இஙன் மீள்வென்’ -இவ்விடத்தே திரும்புவேன்; என்றான் -. ‘இறை’ என்பது சிறிது நேரம் என்பதாம். அவள் மனம் தேறச் சொல்கின்றான் ஆதலின் 14 ஆண்டுகளை ‘இறை’ எனக் கூறினான். இஙன்- இங்ஙன் என்பதன்விகாரம். 140 |