1746. | ‘கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப் பேர் வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்? ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு, உலையற்க!’ என்றான். |
(அம்மா!) ‘கான்புக்கிடினும் - காட்டில் சென்றாலும்; கடல் புக்கிடினும்- கடலிற் சென்றாலும்; கலிப்பேர் வான் புக்கிடினும் - ஆரவாரத்தையும்பெருமையையும் உடைய தேவலோகத்தை அடைந்தாலும்; எனக்கு -; அன்னவை- அந்த இடங்கள்; யான்மாண் அயோத்தி புக்கது ஒக்கும் - யான் சிறந்தஅயோத்தி நகரத்துக்குள் இருப்பதைப் போலவே ஆகும்; எனை நலிகிற்கும் ஈட்டார் யார்?-என்னைத் துன்புறுத்தும் ஆற்றல் உடையவர் யார் உளர்; ஊன்புக்கு, உயிர்புக்கு, உணர்புக்கு உலையற்க’ - உடம்பு, உயிர், உணர்வு ஆகியவற்றுக்குள் (துயரம்) ஊடுருவித்தளரா தொழிக; என்றான் -. எந்நிலையில் இருந்தாலும் ஒரே தன்மையான மனம் உடையவன் ஆதலால் எல்லாம் எனக்குஅயோத்தியே என்றான். இத்தகைய சுத்த சாத்துவிக மனம் உடையானைத் துன்புறுத்த வல்லார்யார்? ஆகவே, மனம் தளராதீர்கள் என்று சுமித்திரையைக் தேற்றினான். உணர்பு உக்கு எனப் பிரித்து உணர்வழிந்து என உரைப்பினும் அமையும். ‘ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வுகெட்டு, என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடி’ என்ற (திருவா. திருத்தெள்.18.) மணிவாசகர் பாட்லில் இவ்வரிசை அமைதல் காண்க. 141 |