1752. | பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி என்னும்படி அன்று, அடியாரினின் ஏவல் செய்தி; மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல், முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள். |
பின்னும் - மேலும்; பகர்வான் - கூறுவாள்; ‘மகனே! -; இவன்பின்செல் - இந்த இராமன் பின்னால் செல்வாயாக; தம்பி என்னும்படி அன்று - இவன்தம்பி என்கின்ற முறையில் நடந்துகொள்ள அன்று; அடியாரினின் ஏவல் செய்தி - இவன்தொண்டர்களைப் போல இவன் இட்ட பணிகளைச் செய்; மன்னும் நகர்க்கே - நிலைபெற்ற அயோத்தி நகரத்துக்கு; இவன் வந்திடின் வா - இவன் திரும்பி வருவானாயின் நீயும்வருக; அது அன்றேல் - இவன் அயோத்திக்கு வரமுடியாமல் போகுமானால்; முன்னம் முடி’- இவனுக்கு முன்னம் நீ உயிரைத் துறந்துவிடு;’ என்றனள் - என்று கூறி வார் விழி சோர நின்றாள்- நீண்ட கண்களிலிருந்து நீர் பெருக நின்றாள். சுமித்திரை தன் மகனுக்குத் தந்த இவ் அறிவுரை நினைக்க நினைக்கப் பெருமிதம் தருவதாகும். இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வரின் அதனைத் தடுக்க உன் உயிரை விடவும் தயங்காதேஎன்றாள், ‘முன்னம் முடி’ என்ற சொல்லால். ‘இந் நெடுங் சிலைவலானுக்கு ஏவல் செய அடியன்யானே’ என்று (3778.) அனுமனிடம் இலக்குவன் பின்னர்த் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதும் காண்க. 147 |