இராமன் வசிட்டனுக்கு உரைத்த மறுமொழி 1767. | ‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன்; இது நெறியும்’ என்றனன் - பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். |
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் - ஆதிசேடனாகிய படுக்கையில் அறிதுயில்செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன் (முனிவனை நோக்கி); ‘அன்னவன் -தயரதனது; பணி தலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன் - கட்டளையைச் சிரமேற் கொண்டுசெய்தல் எனது கடமையாகும்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன் - அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது கடமையாகும்; இது நெறியும்’ - இது நீதியும்ஆகும்;’ என்றனன் -. அவதார நோக்கம் கானகம் செல்வது, அதற்காகவே வந்தவன் என்பதை அறிவிக்க, ‘பன்னகப்பாயலின் பள்ளி நீங்கினான்’ என்றார். 162 |