1773.தம்மையும் உணர்ந்திலர் - தணிப்பு இல் அன்பினால்
அம்மையின் இரு வினை அகற்றவோ? அன்றேல்,
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமைகொல்?-
செம்மல்தன் தாதையின் சிலவர் முந்தினார்.

     சிலவர்த - சிலர்; தணிப்பு இல் அன்பினால் - அடக்க முடியாத
அன்பால்;தம்மையும் உணர்ந்திலர் - தம் நிலையையும் அறியாதவர் கள்
ஆயினராய்; செம்மல்தன் தாதையின் - இராமபிரானது தந்தையாகிய
அயரதனைவிட ; முந்தினார் -முற்பட்டு இறந்து விண் சென்றனர்;
அம்மையின் - வருகின்ற பிறப்பில்; இருவினைஅறுக்கவோ? -
இருவினைகளையும் இல்லாமல் நீக்கிக்கொள்ளவா; அன்றேல் - அப்படி
இல்லாமற்போனால்; விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை கொல் -
பிரிவினால் துடித்தஅரிய உயிர் வெளிப் போனது திரும்ப மீளாமையாலோ.

     சென்ற உயிர் இனித் திரும்பாமல் மீளா உலகம் சேர்ந்ததுஆகலின்,
‘இரு வினை அகற்றவோ’ என்றார். இருவினை அற்றவர் மீளா உலகம்
சேர்வர்ஆதலின்.                                            168