1775. | கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,- வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம். இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!- பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். |
கரும்பு அன மொழியினர் - கரும்பு போன்ற பேச்சினை உடைய மகளிர்; கண்பனிக்கிலர் - கண்ணீர் அரும்பாதவராய்; பெரும் பொருள் இழந்தவர் போலும்பெற்றியர் - பெரிய செல்வத்தை இழந்து விட்டவர்களது தன்மையை உடையவராகி; இரும்புஅளமனத்தினர் என்ன நின்றனர் - இரும்பை ஒத்த மனம் உடையவர் என்று கண்டோர் சொல்லும்படி நின்றார்கள்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் - (இவ்வாறுஆனது) அளவற்ற துன்பத்தால் திகைத்ததாலோ? பெருந்துன்பத்தில் மனம் இறுகிப் போதல் உலகியல்; அவ்வாறு ஒருசிலர் இருந்தனர், ‘ஆம்’ அசை. 170 |