அரசன் தேவியர் துயரம் 1779. | அறுபதினாயிரர் அரசன் தேவியர், மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர், சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்; எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். |
மறு அறு கற்பினர் - குற்றமற்ற கற்பினை உடைய; அறுபதினாயிரர் அரசன்தேவியர் - அறுபதினாயிரம் பேராகிய தசரதனுடைய மனைவியர்; மழைக் கண் நீரினர் - மழை போன்ற கண்ணீரை உடையவராய்; சிறுவனைத் தொடர்ந்தனர் - இராமனைப் பின்தொடர்ந்து; திறந்த வாயினர் - வாய் திறந்து; எறி திரைக்கடல் என இரங்கிஏங்கினார் - அலை வீசும் கடல் போல அழுது வருந்தினார்கள். இவர் உரிமை மகளிர் ஆவர். பரசுராமனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒவ்வொருஆண்டும் மணக் கோலத்துடன் இருக்க வேண்டிய; தயரதன் அறுபதினாயிரம் மகளிரை அறுபதினாயிரம் ஆண்டுகளில் மணந்தான் என்று ஒரு கதை உண்டு. இதுவே வான்மீகத்தில் முந்நூற்றைம்பதின்மர் எனப்பேசப்பெற்றுள்ளது. மூவரே பட்டத்தரசியர் ஆவர். 174 |