1780. | கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும், அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன என்ன, வீழ்ந்து உழந்தனர் - இராமன் அல்லது, மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். |
இராமன் அல்லது - இராமனை அல்லாமல்; மற்றும் - வேறு; மன் உயிர்ப் புதல்வரைப் பெற்றிலார் - நிலைபெற்ற உயிராக உள்ள புத்திரர்களைப்பெறாதவர்களாகிய அத்தேவியர்; கன்னி நல்மயில்களும் - இளமையான நல்ல மயில்களும்; குயில் கணங்களும்- குயிற் கூட்டங்களும்; அன்னமும் - அன்னப் பறவைகளும்; சிறை இழந்து -இறக்கைகளை இழந்து; அவனி சேர்ந்தன என்ன - பூமியை அடைந்தவை போல; வீழ்ந்து உழந்தனர் .- தரையில் விழுந்து வருந்தினார்கள். பறவைகளுக்குச் சிறகுகள் வாழ்வின் ஆதாரம். அதை இழந்த பிறகு அவை வாழ இயலா. அதுபோலவே இராமனே இவர்கள் அனைவர்க்கும் உயிராவான். இராமனை இழந்து உயிர் வாழஇயலாதவராக ஆயினர். 175 |