1781. கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,
அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,
தொளை படு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன -
இளையவர் அழுதினும் இனிய சொற்களே.

     இளையவர் அமுதினும் இனிய சொற்கள்- இளைய அத்தேவியரின்
அமுதத்தைக் காட்டிலும்இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க
விட்டு அரற்றும்  தன்மையால்
-அளவில்லாமல் பெருமூச்சு விட்டு
அழுகின்ற காரணத்தால்;  கிளையினும் நரம்பினும் நிரம்பும்கேழன -
மூங்கிலாலும்,  நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய;  தொளைபடு
குழலினோடுயாழ்க்குத் தோற்றன
- உள்தொளை உடைய
புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின.

     கிளை - மூங்கில். ஆகுபெயராய்ப் புல்லாங்குழலின் இசையைக்
குறித்தது.  நரம்பும்அவ்வாறே  யாழிசையைக் குறித்தது.  கேழன - சுவை
உடையன முன்பு அம்மகளிர் குரல் ஒலி குழலையும்யாழையும் வென்றது.
இப்போது  அமுது  அரற்றிய காரணத்தால் தோற்றது என்பதாம்.      176