1798.தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்,
முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக,
மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார்.

     தலைக்குவட்டு அயல் - உச்சிச் சிகரத்துக்குப் பக்கத்தில்;
மதிதவழும்மாளிகை - சந்திரன் தவழ்ந்து  செல்லும்  உயர்ந்த
மாளிகையினது; நிலைக் குவட்டு இடைஇடை - மேல் நிலை என்னும்
உப்பரிகை இடங்கள்தோறும்; நின்ற நங்கைமார் -நின்ற மகளிர்; இழி
கணீர். ஆலி முலைக் குவட்டு மொய்த்து  உக
- இறங்குகின்ற
கண்ணீ்ர்த் துளி தமது  முலைச் சிகரங்களில் நெருங்கிச் சிந்த;  மலைக்
குவட்டு
-மலைச் சிகரத்தில்; அகவுறு மயிலின் - அகவுகின்ற மயிலைப்
போல;  மாழ்கினார் - மயங்கினர்.

     மயில் அகவுதல் - கூவுதலாம்;  இங்கே மகளிர் அழுதலாம்.
நிலைக்குவட்டு  இடை இடை என்பது ‘பால்கனி’ என்று 
சொல்லப்படுவதாகவும்கொள்ளலாம்.                              193