1805.அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை
நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி
வட்டிலும் இழந்தன; மகளிர் - கால் மணித்
தொட்டிலும் இழந்தன, மகவும் - சோரவே.

     அட்டிலும் புகை இழந்தன - சமையற்கட்டுகள் (சமைத்தல்
இல்லாமையால்) புகையைஇழந்தன; நெட்டிலும்- உயர்ந்த மேல் மாடங்கள்;
அகில் புகை இழந்தன -(பெண்கள் கூந்தலைப் புகை செய்யாமையால்)
அகில் புகைகளை இழந்தன; கிளி -கிளிகள்;  பால் நிறைந்த வட்டிலும்
இழந்தன-
(ஊட்டுவார் இன்மையால்) பால்நிரம்பிய கிண்ணத்தை இழந்தன;
மகளிர் சோர - தாய்மார்கள் துயரத்தால்சோர்ந்தபடியால்;  மகவும் -
பிள்ளைகளும்;  கால் மணித் தொட்டிலும்  இழந்தன - கால் உடைய
மணிகள் அழத்திச் செய்யப்பெற்ற தொட்டிலை  இழந்தன.

     துயர மிகுதியால் நகர் தொழில் மறந்தபடியைச் சொன்னார்.
நெடு(மை) + இல் =நெட்டில்.                                   200