1811. | செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர் கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும் மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே. |
புனல்- நீரை; செய்ம் மறந்தன -வயல்களை மறந்து விட்டன; பசுங்குழவி - இளங் குழந்தைகளை; சிவந்தவாய்ச்சியர் கை - சிவந்த வாயுடையதாய் மகளிர் கைகள்; மறந்தன்-மறந்து போயின; காந்து எரி- விளங்கும்வேள்வித் தீ; நெய்ம் மறந்தன -நெய்யை மறந்து போயின; நெறி அறிஞர் யாவரும்- சாத்திரம் அறிந்தஞானிகள் அனைவரும்; மெய்- தத்துவப் பொருளை; மறந்தனர்-மறந்துபோயினர்; வேதம்-, ஒலி மறந்த- ஒலித்தலை மறந்து போயின. வயலுக்கு நீர் பாய்ச்சுவார் இல்லை. குழந்தைகள் பால் உண்ணவில்லை. வேள்விகள் நடைபெறவில்லை. சாத்திர விசாரணை செய்வாரில்லை. வேதபாராயணங்கள் நடைபெறவில்லை என்பதாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.206 |